முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

Published Date: February 19, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினார்.

மதுரையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 'தோல் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இதை அடுத்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 5.34 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு அண்மையில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கப்பெற்றது.

இந்த நிலையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் அடிக்கல்லுக்கான கல்வெட்டை திறந்துவைத்தார்.

இதை அடுத்து மதுரை தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பணிகளை பார்வையிட்டார். 

இதில் மாவட்ட ஆட்சியர் மா.செள.சங்கீதா, மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், தகவல் தொழில்நுட்ப பூங்கா செயற்பொறியாளர் ஜெயமணி மெளலி, உதவி பொறியாளர் எம். பாலகிருஷ்ணன், ஆகியோ கலந்து கொண்டனர்.

12 ஆயிரம் பேருக்குப் பணி...

மதுரை தகவல் தொழில்நுட்ப பூங்கா தரைதளத்துடன் 12 தளங்களைக் கொண்டதாக கட்டமைக்கப்பட உள்ளது. இங்கு பல்வேறு முன்னணி தொழில் முனைவு நிறுவனங்கள் இங்கு அமைக்க உள்ளன எனவும் 12 ஆயிரம் பேர் பணி வாய்ப்பு பெறுவர் எனவும் மாவட்ட நிர்வாக தகவல்களில் குறிப்பிடப்படுகின்றன.

Media: Dinamani